Type Here to Get Search Results !

RUN BABY RUN REVIEW: ரன் பேபி ரன் விமர்சனம்

  • பணத்துக்காக விற்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை த்ரில்லர் கதைக்களத்துடன் சொன்னால் அது 'ரன் பேபி ரன்'.
  • மருத்துவக் கல்லூரி மாணவியான சோஃபியா கல்லூரி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுகிறார். அவரது நெருங்கிய தோழியான தாராவை (ஐஸ்வர்யா ராஜேஷை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 
  • அவர்களிடமிருந்து தப்பி வரும் தாரா, தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாக கூறி சத்யாவிடம் (ஆர்.ஜே.பாலாஜி) அடைக்கலம் கோருகிறார். 
  • முதலில் மறுக்கும் சத்யா பிறகு வீட்டில் அடைக்கலம் கொடுக்க ஒப்புக்கொள்கிறார். யார் இந்த தாரா? அவரை எதற்காக யார் தேடுகிறார்கள்? அவரைக் காப்பாற்ற துணியும் சத்யா என்னென்ன சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறார்? இதுதான் திரைக்கதை.
  • படம் தலைப்பிற்கு ஏற்றபடி தொடங்கியதும் எந்தவித சமரசமுன்றி ஓட்டம் பிடிக்கிறது. சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையுடன் ஒவ்வொரு திருப்பங்களும் பிணைந்து த்ரில்லருக்கான தீனியை தாராளமாக திரையில் தெளிக்கின்றன. 
  • குறிப்பாக, சில இடங்களில் காட்சிகளை விட, பின்னணி இசையே ஒருவித பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி கதைக்குள் நுழைக்கிறது. வயலினின் வேகத்தையும், காட்சிகளையும் வேகத்தையும் பொருத்தி முதல் பாதியில் விறுவிறுப்பான திரையனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார்.
  • இடைவிடாத பேச்சும், டைமிங் காமெடியிலும் பார்த்து வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு இயல்புக்கு மாறான லிமிடெட் வசனங்களும், காமெடியற்ற களமும் பொருந்துகின்றன. 
  • சீரியஸான, பதற்றமான முகபாவனைகளாலும், ஒரு மரணத்தை பார்த்ததும் திடுக்கிடும் காட்சிகளிலும் கடந்த கால நடிப்பிலிருந்து முன்னேறியிருக்கிறார். 
  • நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார் இருவரும் பெரிய அளவில் வேலையில்லை; இருப்பினும் தங்களுக்கு கொடுத்த வேலைக்கு நியாயம் சேர்க்கின்றனர். 
  • தவிர ராதிகா, விவேக் பிரசன்னா, ஜார்ஜ் மரியான், தமிழரசன் உள்ளிட்ட ஏராளமானோர் படத்திலிருந்தும் அவர்களுக்கான கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படவில்லை.
  • முதல் பாதியில் விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும் படம், இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்க்கும் தருணங்களில் தடுமாறுகிறது. 
  • மெரிட்டில் உயர் கல்வி படிக்கும் ஆதரவற்ற மாணவர்களை பணம் படைத்தவர்களுக்காக அங்கிருக்கும் துரத்தும் அரசியல் குறித்து பேசும் படம், அதைத் தகவலாக சொல்கிறது.
  • முதல் பாதியின் முடிச்சுகள் இரண்டாம் பாதியிலும் நீளும்போது, 'இதுக்கு மேல முடியாது' என்பது போல ஒரு கட்டத்தில் அயற்சியை தொற்றிக்கொள்கிறது. 
  • பிறகு அந்த முடிச்சு அவிழும்போது அதற்கான பின்புலக் கதை பலமில்லாமல் இருப்பதும், கதையின் கரு வெறும் வாய்மொழியில் வசனங்களாக கடப்பதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
  • தவிர, படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. ஆனால், அவர்களின் தேவை படத்தில் எழாத வண்ணம் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதுடன், சிறுபான்மையினர் ஒருவரை இறுதியில் குற்றவாளியாக காட்ட வேண்டிய அவசியமும் புரியவில்லை. 
  • யுவாவின் டாப் ஆங்கிள் ஒளிப்பதிவும், சாம்.சிஎஸின் பின்னணி இசையும் த்ரில்லர் காட்சியனுபவத்திற்கு உறுதியளிக்கின்றன.
  • மொத்தத்தில், முதல் பாதியில் விறுவிறுப்பாக ரன்னராக இருந்த பேபி, இரண்டாம் பாதியில் வின்னராக இருக்கும் என எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு 'கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்' மூச்சு வாங்கியிருக்கிறது. நீங்கள் த்ரில்லர் கதை விரும்பியாக இருந்தால் உங்களுக்கு படம் உகந்ததாக இருக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.