Type Here to Get Search Results !

The Great Indian Kitchen: தி கிரேட் இந்தியன் கிச்சன் Tamil Movie Review



The Great Indian Kitchen: தி கிரேட் இந்தியன் கிச்சன் Tamil Movie Review: இந்திய குடும்பங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தை கண்ணாடியாய் காட்டி முகத்தில் அறையும் படைப்பு.

துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, ரிப்பீட் என சுழலும் சக்கரமாய் சுழன்றுகொண்டேயிருக்கிறார் புதிதாக திருமணமான ஐஸ்வர்யா ராஜேஷ். இதைப் பற்றியெல்லாம் அவரது கணவரான ராகுல் ரவீந்திரனுக்கு எந்தக் கவலையுமில்லை. 

அவரது கவலையெல்லாம் 'லைட் ஆஃப் பண்ணவா?' என்பதுதான். இப்படி மிஷினைப் போல இயங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருகட்டத்தில் ஆக்ரோஷம் கொண்டெழுந்து இதையெல்லாம் எப்படி உடைத்து வெளியேறி வீறுநடையிடுகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கடந்த 2021-ம் ஆண்டு ஜியோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை தமிழில் ஆர்.கண்ணன் அதிகாரபூர்வ தழுவலாக உருவாக்கியிருக்கிறார். 

'சமைக்க பிடிக்குமா?' என ஐஸ்வர்யா ராஜேஷிடம் கணவர் கேட்கும்போது, 'சமைக்க தெரியும்' என அவர் பதிலளிக்க, கணவர் ராகுல், 'எனக்கு சாப்பிட புடிக்கும்' என்கிறார். 

மொத்தப் படத்தையும் விளக்கும் இந்த வசனத்துடன் படம் தொடங்குகிறது. நீண்ட நேரமெடுக்காமல் நேரடியாக படம் கதைக்குள் செல்கிறது. மலையாள படத்தை தமிழில் பார்ப்பது போல எந்த வித பெரிய மாற்றங்களுமில்லாத திரைக்கதை லூப்பில் பயணிக்கிறது.

திருமணத்திற்கு பிறகான ஒரு பெண்ணின் மணவாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த சமைத்தல், துவைத்தல், பாத்திரம் விளக்குதல், படுக்கையறைக்கு செல்லுதல் என்ற லூப் தருணங்கள் அச்சு அசலாக காட்டுகின்றன. 

முகபாவனைகளின் வழியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார் ஐஸ்வர்யா. அவரை மையமிட்டே கதை நகர்வதால் தேர்ந்த நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தின் வலியை எளிதாக கடத்திவிடுகிறார்.

ராகுல் ரவீந்திரன் ஆணாதிக்க சமூகத்தின் நம்மில் ஒருவராக பிரதிநிதித்துவப்படுத்துப்பட்டு நடிப்பில் தேர்கிறார். குறிப்பாக அவரது தந்தையாக நடித்திருக்கும் போஸ்டர் நந்தகுமார் 'விறகு அடுப்புல சமைச்சுடும்மா', 'வாஷிங் மிஷின்ல துணிய போடாத' என 'பூமர்' அங்கிளாக பார்வையாளர்களின் அத்தனை வசவுகளையும் வாங்கும் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் கூட்டுகிறார். கலைராணி, யோகிபாபு ஆகியோர் கதைக்கு தேவையான பங்களிப்பை சிறப்புத் தோற்றத்தில் செலுத்துகின்றனர்.

தொடர் லூப் காட்சிகளுக்கு இடையே, 'அவருக்கு காரம் பிடிக்கும் இவனுக்கு காரம் பிடிக்காது' என குடும்ப ஆண்களின் விருப்பதை தெரிவிக்கும் அம்மாவிடம், 'அத்த உங்களுக்கு என்ற போது 'அந்த பொட்டு கடல எடும்மா' என்பதும், தோழியின் கலைநிகழ்ச்சிக்கு போக விருப்பம் தெரிவிக்கும்போது, 'சண்டே தானே ஃப்ரீயா இருக்கேன்' என தட்டிக் கழிப்பதும், ருசியாக சாப்பிடு கோரும் குடும்பம், சமையலறையின் கழிவுநீர் வழியும்போது கண்டுகொள்ளாதது போன்ற சுயநலமிக்க ஆணாதிக்க உண்மை முகம் வெளிப்படுத்தும் காட்சிகளால் படத்தின் அடர்த்தி கூடுகிறது. 

மற்ற காட்சிகள் மலையாள படத்தை அப்படியே நினைவுறுத்தினாலும், தமிழுக்காக சேர்க்கப்பட்டிருக்கும் பள்ளிக்கூட காட்சி கதைக்கு கூடுதல் நியாயம் சேர்க்கிறது.

மனைவியின் பிரச்சினையை கண்டுகொள்ளாத கணவர்,'லைட் ஆஃப் பண்லாமா?' என்றதும் அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தன் விருப்பம் தெரிவிக்கும் பதில் யதார்த்த சூழலை பளிச்சிடுகின்றன. 

மாதவிடாய் குறித்த காட்சிகளில் 'நான் சொன்னாதான தெரியபோகுது', 'இப்படியெல்லாம் பண்ணனும்னு சாமி வந்து சொன்னுச்சா; சாமிக்கு எல்லோரும் ஒண்ணு தான்', 'வீட்ல அம்மா தான் வேலைக்கு போறாங்க அப்போ அவங்க தானே குடும்ப தலைவர்' போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. 

லூப் காட்சிகளை தொடர்ந்து பார்க்கும் நமக்கு அவை சோர்வை தந்தாலும் அந்த லூப் வேலையை செய்யும் பெண்களின் நிலையை அப்பட்டமாக உரைக்கிறது படம்.

ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் பின்னணி இசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடந்து செல்லும் காட்சிகள் கூடுதல் ஹைப் கொடுக்கின்றன. சூரிய ஒளியை ஜன்னல் வழியாக மொத்த சமையலறையையும் காட்சிப்படுத்தியுள்ள பாலசுப்ரமணியெம் ப்ரேம்கள் அழகூட்டுகின்றன. நீட்டி முழங்காமல் கதைக்கு தேவையானது கச்சிதமாக வெட்டியிருகின்றன லியோ ஜான்பாலின் கம்ப்யூட்டர் கீக்கள்.

படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான மலையாளத்தில் ஒருவித இயல்புத்தன்மை நெடுங்கிலும் கைகூடியிருக்கும். தமிழில் அந்த இயல்புத்தன்மை ஏனோ மிஸ்ஸிங்! மேலும், நடுத்தர குடும்பங்களில் பெண்கள் ஒடுக்கப்படுவது போலவும், மேல்தட்டு குடும்பங்களில் ஆண் சமைத்து பெண்ணுக்கு பரிமாறும் வகையிலான காட்சி அமைப்பு விவாதத்திற்குரியது. 

மலையாளத்தில் ஓடிடியில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை தமிழில் திரையரங்குகளில் காணும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதே இரண்டுக்குமான வித்தியாசம்.

மொத்தத்தில் ரீமேக்கிற்கு நியாயம் சேர்த்ததா? இல்லையா? - இதையெல்லாம் தாண்டி, அதன் அடர்த்தியான உள்ளடக்கம் நிச்சயம் அனைத்து பார்வையாளர்களுக்கும் எளிதில் கனெக்ட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.